கசையிழை அல்லது சவுக்குமுளை என்பது மெய்க்கருவிலி மற்றும் மெய்க்கருவுயிரிகளில் காணப்படும் நீண்ட சாட்டையைப் போல் உள்ள பகுதியை நாம் கசையிழை அல்லது நகரிழை என விளிக்கிறோம். இவை கலங்களின் இடப்பெயர்ச்சிக்குத் துணைப்புரிவதால் இவை நகரிழை எனவும் அழைக்கப்படுகிறது.[1][2][3]

இவற்றின் நீளம் கலத்தின் நீளத்தை விட மிகுதியாகவும், குறுக்களவை விட பன்மடங்கு பெரிதாகவும் இருக்கும். மெய்க்கருவிலிகளில் குறிப்பிடும் படியாக விந்துவின் பின்னால் ஒற்றை நகரிழையாக காணப்படுகிறது. இவையே பாக்டீரியாவில் ஒன்றாகவோ ஒன்றுக்கு மேற்பட்டோ காணப்படுகிறது. இவை பொதுவாக கோலுயிரி பாக்டீரியாவில் காணப்படுகின்றன. கோளவுறு நுண்ணுழையாட்களில் இவை பெரும்பாலும் இருப்பதில்லை. இவற்றின் உதவியால் உயிர்கள் நீந்தி இடப்பெயர்ச்சி செய்கின்றன.

வகைப்பாடு

தொகு

மூன்று வகையான கசையிழைகள் இதுவரை வரையறுக்கப்பட்டுள்ளது. அவை பாக்டீரியா, ஆர்கிபாக்டீரியா மற்றும் மெய்கருவிலி யாகும்.

  • பாக்டீரியாவின் கசையிழைகள் - திருகாணியைப்போல் சுற்றும் சுருள் வடிவத்தில் காணப்பெறும். அவை பாக்டீரியாக்களில் காணப்படும் பல வகை இடப்பெயர்ச்சியில் இரண்டு அசைவுகளை இது வெளிப்படுத்துகிறது.
  • ஆர்கிபாக்டீரியாவின் கசையிழைகள் - மேலோட்டமாக பார்க்கும் போது இவை மெய்பாக்டீரியாவிற்கு ஒத்திருந்தாலும், அவை தனித்துவம் வாய்ந்தவையாகவும் வேறாகவும் அறியப்படுகிறது.
  • மெய்க்கருவுயிரி கசையிழைகள் - இவை விலங்கு, தாவரம் மற்றும் புரோட்டிச்டு கலங்களில் வெளியே நீட்டப்பட்டு காணப்படும் உறுப்பு. இவை கலம் முன்னும் பின்னும் அசைய முற்பட செயலாற்றுகிறது. மெய்க்கருவுயிரி கசையிழைகள் மெய்க்கருவுயிரிகளின் சிலியா என்னும் உறுப்புடன் இணைத்து வரையறுக்கப்பட்டுள்ளது.

பாக்டீரியா கசையிழைகள்

தொகு

கலச்சுவரை ஒட்டி உட்புறம் அமைந்துள்ள கலச்சவ்வுப் பகுதியில் வேர்ப்பகுதியும் நீண்ட சாட்டையைப் போல் கலச்சுவர்களுக்கு வெளியில் நீட்டியுள்ள உறுப்பு கசையிழை எனப்படும். இவை பாக்டீரியாவின் நகர்வுக்கு மிகவும் துணைப்புரிகிறது. இது 20 நானோமீட்டர் அடர்த்தியுள்ள வெற்றுக்குழாய் வடிவில் காணப்படும். இது ஃப்லாசெல்லின் என்னும் புரதத்தால் ஆனது. திருகாணிவடிவ நீண்ட கசையிழை மோட் கூட்டமைப்பு (Mot complex) என்னும் புரதத்தால் ஆன இயந்திர ஆற்றலால் இயங்குகிறது. இதன் அமைப்பு பாக்டீரியாவின் வகைகளான கிராம் சாயமேற்காத மற்றும் கிராம் சாயமேற்கும் இருதரப்புகளுக்கும் இடையில் வேறுபடுகிறது.

மேலும் பாக்டீரியாவில் இடம் பெற்ற கசையிழைகளின் எண்ணிக்கை மற்றும் இடம் குறித்து ஐந்து வகையாகப் பிரிக்கின்றனர். அவை, கசையிழையற்ற (atrichous) ஒற்றைக் கசையிழை (monotrichous), ஒருதுருவ கசையிழை (lophotrichous), இருதுருவ கசையிழை (amphitrichous) மற்றும் சுற்றுக்கசையிழை (peritrichous) ஆகியன.

ஆர்க்கீயா

தொகு

ஆர்க்கி கசையிழை தனித்துவ மிக்க வடிவத்தில் மையப்பண்பை இழந்துக் காணப்படுகிறது. ஆர்கியல் ஃப்லாசெல்லின் புரதம் N - இணைப்பு கிளைக்கன் சேர்ப்பால் தனக்கேயுரிய அமைப்பும் பண்பும் கொண்டுக் காணப்படுகிறது.

குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் கீழே வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது:

  • பாக்டீரியாவின் கசையிழை நீரிய அயனி (H+)/உப்பியத்தனிம (Na+) சோடியம் அயனிகளாலும் ஆற்றல் பெற்று இயங்குகிறது. ஆனால் ஆர்க்கியாவின் கசையிழை ATP என்னும் மூலக்கூறால் ஆற்றல் பெறுகிறது.
  • பாக்டீரியாவில் கூட்டு கசையிழைகள் தன்னிச்சையாக இயங்கும் ஆனால் இவைகளில் கசையிழைக் கற்றைகள் ஒத்த இயக்கங்களைப்பெற்று ஒரே அமைப்பில் இயங்கும்.
  • பாக்டீரியா கசையிழைகள் ஆர்க்கிய கசையிழைகளைவிட பெரிதாகவும், பெரிய வெற்றுக் குழல் போல் காட்சியளிக்கும்.

மெய்க்கருவுயிரி கசையிழைகள்

தொகு
 
மெய்க்கருவுயிரிகளின் சவுக்குமுளை.
 
மெய்க்கருவுயிரி சவுக்குமுளை ஒன்றின் குறுக்குவெட்டு முகம். இதன் 9+2 கட்டமைப்பை தெளிவாக அவதானிக்க முடிகின்றது.

மெய்க்கருவுயிரிகளில் சிலியாவுடன் இணைந்து கசையிழைகளான உள்ளுருப்பை அண்டுலிப்போடியா என அறியப்படுகிறது. இவை ஒன்பது இணை நுண்குழாய் பிணைப்பால் ஆன கற்றையாகும். இவைகளுக்கு நடுவில் இரு ஒற்றை நுண்குழைய் காணப்படுகிறது. இந்த அமைப்பை நாம் ஆக்சோநீம் என விளிக்கிறோம். யூக்கரியோட்டாக்களின் சவுக்குமுளைகளைச் சுற்றி முதலுரு மென்சவ்வு காணப்படும். இவ்வகைச் சவுக்குமுளைகள் 9+2 கட்டமைப்பைப் பெற்றுள்ளன. அதாவது யூக்கரியோட்டாக்களின் சவுக்குமுளையின் குறுக்கு வெட்டுமுகத்தை இலத்திரன் நுணுக்குக்காட்டியூடாக அவதானித்தால், நடுப்பகுதியில் இரு தனி நுண்புன் குழாய்களும், சுற்றிவர ஒன்பது சோடி நுண்புன்குழாய்கள் முதலுரு மென்சவ்விற்கு அருகாகக் காணப்படும்.

 
சவுக்குமுளை மற்றும் பிசிர் ஆகியவை அசையும் விதங்கள்

சவுக்குமுளையும் பிசிரும் ஒரே நுண்கட்டமைப்பையே கொண்டுள்ளன. அவற்றின் நீளமும் அவை அசையும் விதமுமே அவற்றை வேறுபடுத்துகின்றன. இரண்டும் கல மென்சவ்விலுள்ள அடிச்சிறுமணி என்னும் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. அடிச்சிறுமணி 9+0 கட்டமைப்பைக் கொண்டிருக்கும். அத்துடன் அடிச்சிறுமணியின் நுண்புன்குளாய்கள் சோடிகளாக அல்லாமல் மும்மைகளாகவே காணப்படும். அடிச்சிறுமணியின் மத்தியில் நுண்புன்குழாய்கள் இருப்பதில்லை. யூக்கரியோட்டாக்களின் சவுக்குமுளைகளின் கட்டமைப்பு பாக்டீரிய சவுக்குமுளை கட்டமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். எனினும் இவை இரண்டும் கலத்தின் அசைவை ஏற்படுத்தல் என்ற ஒரே தொழிலையே புரிகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  • Bardy SL, Ng SY, Jarrell KF (February 2003). "Prokaryotic motility structures". Microbiology (Reading, Engl.) 149 (Pt 2): 295–304. doi:10.1099/mic.0.25948-0. PubMed.
  • Jahn TL, Bovee EC (1965). "Movement and Locomotion of Microorganisms". Annual Review of Microbiology 19: 21–58. doi:10.1146/annurev.mi.19.100165.000321. PubMed.
  • Lefebvre PA; Lefebvre, PA (2001). "Assembly and Motility of Eukaryotic Cilia and Flagella. Lessons from Chlamydomonas reinhardtii". Plant Physiol. 127 (4): 1500–1507. doi:10.1104/pp. 010807. PMC 1540183. PubMed.
  1. Bardy, Sonia L.; Ng, Sandy Y. M.; Jarrell, Ken F. (1 February 2003). "Prokaryotic motility structures". Microbiology 149 (2): 295–304. doi:10.1099/mic.0.25948-0. பப்மெட்:12624192. 
  2. Silflow, Carolyn D.; Lefebvre, Paul A. (1 December 2001). "Assembly and Motility of Eukaryotic Cilia and Flagella. Lessons from Chlamydomonas reinhardtii". Plant Physiology 127 (4): 1500–1507. doi:10.1104/pp.010807. பப்மெட்:11743094. 
  3. Jarrell, Ken F., ed. (2009). Pili and flagella: current research and future trends. Norfolk: Caister academic press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-904455-48-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசையிழை&oldid=4170620" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES