வியர்வை என்பது, வியர்த்தல் என்னும் தொழிற்பாட்டின் மூலம் உடலிலிருந்து தோலினூடாக வெளியேற்றப்படும் ஒரு திரவம் ஆகும். இது முக்கியமாக நீரையும், சிறிய அளவில் சோடியம் குளோரைடையும் கொண்டது. வியர்வையில் 2-மீதைல்பீனோல், 4-மீதைல்பீனோல் போன்ற வேதியியற் சேர்வைகளும் காணப்படுகின்றன. வியர்வை பாலூட்டிகளின் உடற் தோலில் காணப்படும் வியர்வைச் சுரப்பிகளினால் வெளியேற்றப்படுகிறது.

தோல் உறுப்புக்களின் உருப்பெருக்கத் தோற்றம். வியர்வைச் சுரப்பிகள் காட்டப்பட்டுள்ளன.

ஆண்களின் வியர்வையின் சில கூறுகள் பாலுணர்வு தொடர்பான ஈர்ப்புத் தன்மைகளைக் கொண்டவை எனக் கூறப்படினும்[1]., மனிதர்களைப் பொறுத்தவரை வியர்த்தல் ஒரு வெப்பச் சீராக்கத் தொழிற்பாடு ஆகும். உடற் தோலின் மேற்பரப்பில் இருந்து வியர்வை ஆவியாகும்போது, அது ஆவியாவதற்குத் தேவையான மறை வெப்பத்தை உடலிலிருந்து எடுத்துக் கொள்வதால் உடல் குளிர்ச்சியடைகிறது. இதனால், கோடை காலத்தில் அல்லது வேலை செய்வதன் மூலம் உடற் தசைகள் சூடேறும் போது உடல் வெப்பநிலை உயராமல் தடுப்பதற்காகக் கூடுதலான வியர்வை சுரக்கப்படுகின்றது. பயம் போன்ற உணர்வுகள் இருக்கும்போதும், குமட்டல் இருக்கும்போதும் வியர்த்தல் கூடுதலாகக் காணப்படுவதுடன், குளிரின் போது இது குறைந்தும் காணப்படும்.

வியர்வைச் சுரப்பிகள்

தொகு

இரண்டு வகையான வியர்வைச் சுரப்பிகள் உண்டு. இவற்றினால் சுரக்கப்படும் வியர்வையின் தன்மையும், நோக்கமும் பெரிதும் வேறுபட்டுக் காணப்படுகின்றன.

  • கழிவு வியர்வைச் சுரப்பிகள்: இவை உடலின் எல்லாப் பகுதிகளிலும் உள்ளன. எனினும் உட்கை, பாதங்களின் அடிப்பகுதி, நெற்றி ஆகிய இடங்களில் கூடுதலாகக் காணப்படுகின்றன. இவற்றில் உருவாகும் வியர்வை பெரும்பாலும் நீரையும், பல்வேறு உப்புக்களையும் கொண்டிருக்கும். இவை பொதுவாக உடல் வெப்பச் சீராக்கத்துக்கு உதவுகின்றன.
  • புற வியர்வைச் சுரப்பிகள்: இவை சுரக்கும் வியர்வையில் கொழுப்புப் பொருட்கள் அதிகம் உள்ளன. இவை கக்கப் பகுதிகளிலும், பாலுறுப்புக்களைச் சுற்றியும் அதிகம் காணப்படுகின்றன. இந்த வியர்வையில் கரிமச் சேர்வைகளை உடைப்பதில் உதவும் பக்டீரியாக்கள் இருக்கின்றன. வியர்வை மணத்துக்கான காரணம் இதுவேயாகும்.

குறிப்புகள்

தொகு
  1. Smelling a single component of male sweat alters levels of cortisol in women", C. Wyart et al., Journal of Neuroscience, February 7, 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=வியர்வை&oldid=3393859" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES